15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரரை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர்கள் கண்ணீர் மல்க தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி பெருமாள் (60). இவரது மனைவி ராஜம்மாள் (55). இவர்களுக்கு நாகராஜ், ராமசாமி என்ற இரண்டு மகன்களும் ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இதில் நாகராஜும், ராமசாமியும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், 1996ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ராமசாமி, கடந்த 2005ஆம் ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு பணிக்குச் சென்றுள்ளார். ஆனால் கடந்த 2006ஆம் ஆண்டில் விடுப்பு எடுத்து சென்ற ராமசாமி நீண்ட நாட்களாக பணிக்கு திரும்ப வில்லை என்று தேவாரம் காவல் நிலையத்திற்கு ராணுவ முகாமில் இருந்து தகவல் வந்துள்ளது.
பின்னர், தேவாரம் போலீசார் மூலம் தனது மகன் காணவில்லை என்பது பெருமாள் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெருமாளும் அவரது மனைவி ராஜம்மாளும் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு தேவாரம் காவல் நிலையம், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகங்களில் தொடர்ந்து மனு கொடுத்து வந்துள்ளனர்.
இதற்கு பதில் ஏதும் தெரியாததால் மதுரை நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ராமசாமியின் பெற்றோர், ராணுவ வீரரான தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்,
அந்த மனுவில் ஜம்மு-காஷ்மீரில் பணியில் இருக்கும் போதே, தனது மகன் காணாமல் போய் 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை பெற்றோர்களாகிய எங்களுக்கு விசாரித்துக் கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.