தமிழ்நாடு

மெட்ரோவில் வேலை என நூதன மோசடி; ஒருவர் கைது

மெட்ரோவில் வேலை என நூதன மோசடி; ஒருவர் கைது

webteam

போலி இணையதளம் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தை திறந்தவுடன் ஒரு அறிவிப்பு வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் மெட்ரோவில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaimetrorail.org-யிலும், நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக வெளியாகும் போலி விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரால் நடத்தப்படும் மோசடிகளே இந்த அறிவிப்புக்கு காரணம். அண்மையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தைப் போலவே www.cmrlco.org என்ற முகவரியில் போலி இணையதளம் நடத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இதுகுறித்து சைபர் க்ரைம் காவல்துறை நடத்திய விசாரணையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திருடி அதன் வடிவமைப்பிலேயே போலி இணையதளம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

போலி இணையதளம் நடத்தி, அதில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக விளம்பரங்கள் வெளியிட்டதாகவும், அதை நம்பி விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடிப் புகாரில் கேரளாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஸ்ரீஜித் என்பவரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித்தை கேரளாவுக்கே சென்று கைது செய்தது தமிழக காவல்துறை. சென்னை அழைத்து வரப்பட்ட ஸ்ரீஜித் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.