கர்நாடக மாநிலம் நந்திமலை, பெங்களூரு மற்றும் அதன் புறநகரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யும்போது, அது ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு சென்று அங்கு நீர்வரத்து அதிகரிக்கும். அந்த நேரத்தை பயன்படுத்தி அங்குள்ள தொழில் நிறுவனங்கள் ரசாயன கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடுகிறார்கள். இதனால் ஆற்றின் நீர் மாசடைந்து அப்படியே கெலவரப்பள்ளி அணைக்கு வந்துவிடுகிறது.
இதனால் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் போது, வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி செல்கிறது. இது பல ஆண்டுகளாகவே தொடர்கடையாக உள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வருடம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 437 கன அடியாக இருக்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் நீர்வரத்து குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இப்படி குறைந்த நீர்வரத்தின்போதும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் முழுக்க நுரை பொங்கி வழிந்து ஓடுகிறது.
முன்னதாக 800 கன அடிக்கு மேல் நீர் வரும்போதுதான், நுரை பொங்கி வருவது வாடிக்கையாக இருந்தது. தற்போது 437 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையிலும், நுரை பொங்கி நீர் வெளியேறுவதால் விவசாயிகள் அச்சமைடைந்துள்ளனர். இந்த கோடைகாலத்தில் இதுபோன்ற ரசாயன நுரை சற்று குறைந்தும், பின்பு அதிகரித்தும் மாறி மாறி காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.