தமிழ்நாடு

பழனியில் பிரபல பஞ்சாமிர்த கடைகளில் சோதனை - வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரம்

பழனியில் பிரபல பஞ்சாமிர்த கடைகளில் சோதனை - வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரம்

webteam

வரி ஏய்ப்பு செய்ததாக பழனியில் பஞ்சாமிர்தக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை வருகின்றனர்.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகிய இரு பஞ்சாமிர்தக் கடைகளின் உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். சித்தனாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர்களான அசோக்குமார், சிவனேசன் ஆகியோரின் வீடுகள், கடைகள், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் உறவினர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

சோதனையின் போது உரிமையாளர்களின் வீட்டில் இருந்து தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகியவை பறிமுத‌ல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய அளவிலான கடைகள் மூலம் பஞ்சாமிர்தம் விற்பனை செய்து இவ்வளவு சொத்து சேர்க்கப்பட்டதா? அல்லது வேறு எவ்வாறு சொத்து சேர்க்கப்பட்டது? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று கந்தவிலாஸ் பஞ்சாமிர்த உரிமையாளர்களான செல்வகுமார், பாஸ்கரன் ஆகியோரின் வீடுகள், கடைகள், கிட்டங்கிகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களின் வருமானம், சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. சோதனையில் கூடுதலாக ஆவணங்கள் சிக்கும் என்று கூறப்படுவதால் மேலும் இரண்டு நாட்களுக்கு சோதனை நீடிக்கும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.