தமிழ்நாடு

போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்

போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் - வருமானவரித்துறை பதில்

webteam

ஜெயலலிதாவின் வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை என வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு செலவில் நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் வெங்கடேசன் தாக்கல் செய்த பதில் மனுவில், சொத்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் சொத்துகளை நினைவில்லமாக மாற்ற எந்தச் சட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசும், மனுதாரர்களும் விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

மேலும் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி உள்ளதா? என்பதை வருமானவரித்துறையினர் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை உள்ளதா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறி விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரூ. 10.13 கோடி சொத்துவரி, ரூ. 6.62 கோடி வருமானவரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் 4 சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் போயஸ் இல்லமும் ஒன்று எனவும் வருமானவரித்துறை தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை முடக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐதராபாத்திலுள்ள வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கடை ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபமில்லை எனவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டு இரண்டு வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.