தமிழ்நாடு

ஆளுநர் இல்லைனா பல சிக்கல் இல்லை!-ஆன்லைன் ரம்மி அவசரச்சட்டம் காலாவதியால் அமைச்சர்கள் ஆவேசம்

ஆளுநர் இல்லைனா பல சிக்கல் இல்லை!-ஆன்லைன் ரம்மி அவசரச்சட்டம் காலாவதியால் அமைச்சர்கள் ஆவேசம்

webteam

ஆளுநர் எந்த ஒரு முடிவும் தெரிவிக்காததால் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் ரம்மி தடை மீதான அவசரச் சட்டம் காலாவதியான நிலையில், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், திமுக அமைச்சர்கள்.

ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதி

செப்டம்பர் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நடந்த பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. பின்னர் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் ஆளுநர் அதில் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணி நேரத்தில் பதிலும் கொடுத்திருந்த நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் நேற்றோடு காலாவதியாகிவிட்டது. சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி முதலிய இணையதள வழி சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அரசு இயற்றிய அவரச சட்டம், அனைத்து ஏற்பாடுகளும், வாக்கெடுப்புகளும் நடத்தப்பட்டு, ஆளுநர் ஒருவரின் ஒப்புதல் இல்லாமல், அமலுக்கு வராமலேயே காலாவதியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு?

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் காலாவதியாகியுள்ள நிலையில், அதைக்குறித்து பேசியிருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

”ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை, ஆளுநரிடமிருந்து எந்தவிதமான தகவலும் இதுவரை வரவில்லை. இந்த விவகாரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை மக்களிடமே விட்டு விடுகிறோம். ஆளுநர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக நாங்கள் பதில் அளித்துள்ளோம். இருந்தும் ஏன் ஆளுநர் காலதாமதம் படுத்துகிறார் என்பது தெரியவில்லை” என்று பேசினார்.

மேலும், “ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத் தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம், காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது, ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும். சட்டம் காலாவதி ஆகிவிட்டதால் ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் முறையிடலாமா?

”ஆளுநர் கையெழுத்து போட்டு விட்டால் இது உயிர் பெற்று வந்துவிடும். தற்போது உள்ள சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் மட்டும் தான் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்

ஆளுநர் மீது வழக்கு போட முடியாது, ஆளுநர் இந்த சட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும், ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது, ஆளுநர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும், தெளிவான பதில்களை நாங்கள் ஏற்கனவே ஆளுநருக்கு கூறியுள்ளோம்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

கவர்னர் பதவியே காலாவதியானது தான்! - கனிமொழி எம்பி

தூத்துக்குடி சிவந்தாகுளம் பள்ளியில் ”வானவில் மன்றம்” திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு இன்று தடை விலக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு?, “ஆளுநர் பதவியே காலாவதியானது தான், அதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம், அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருப்போம்” என்று பேசினார்.

மேலும், “கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று, கவர்னர் இல்லை என்றால் பல சிக்கல்கள் தீர்ந்து விடும், எதற்காக ஆன்லைன் ரம்மி தடையை பாதுகாக்க துடிக்கிறார்கள் என தெரியவில்லை” என கூறினார்.

அதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை - அமைச்சர் பொன்முடி!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி பேசுகையில், ”ஆன்லைன் ரம்மி தொடர்பாக ஆளுநரை பார்க்க சட்டதுறை அமைச்சர் அனுமதி கேட்டார், ஆனால் அதற்கு கூட ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மற்ற மசோதாவிற்க்கும் விரைந்து ஆளுநர் முடிவெடிப்பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

நான் கருத்து கூற முடியாது - ஆளுநர் தமிழிசை

இதுகுறித்து ஆளுநர் தமிழிசை கூறுகையில், “தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நான் கருத்து சொல்ல முடியாது .இதை தமிழக ஆளுநரிடம் கேட்க வேண்டும்.தமிழக ஆளூநர் சில விவரங்களை கேட்டு இருக்கின்றார். அமைச்சர்களும் விவரங்களை தெரிவித்து இருக்கின்றனர்.ஆன் லைன் ரம்மி நடைபெற கூடாது என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்கின்றது” என்றார்.

டிடிவி தினகரன் கருத்து

”ஆன் லைன் ரம்மி சட்டம் காலதாமதம் ஆகியது துரதுஷ்டமானது. மாநில அரசின் சட்டத்தை ஆளுநர் காலம் தாழ்த்த கூடாது. இதை வரும் காலத்தில் பார்க்க வேண்டும். ஆளுநர் மீதான விமர்சனம் இல்லாமல் இருக்க வேண்டும் ” என்று அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.