தமிழ்நாடு

”எல்.முருகன் குழப்பத்தை ஏற்படுத்துவாரானால் அவரை பாஜக நீக்க வேண்டியிருக்கும்” -புகழேந்தி

”எல்.முருகன் குழப்பத்தை ஏற்படுத்துவாரானால் அவரை பாஜக நீக்க வேண்டியிருக்கும்” -புகழேந்தி

webteam

பாரதிய ஜனதா உடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்தபோதிலும், முதல்வர் வேட்பாளர் குறித்து முரணான கருத்துகளை முன்வைக்கிறது தமிழக பாஜக. அதற்கு அதிமுக தரப்பிலும் தக்க பதில் அளிக்கப்படுகிறது. 

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அதிமுக பாஜகவுடனான கூட்டணி தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினர்.

இதனையடுத்து பாஜக - அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கருதப்பட்ட நிலையில், அண்மையில் அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “ கூட்டணிக்கு முருகன் குழப்பத்தை ஏற்படுத்துவரானால் பாஜக தலைமை முருகனை நீக்க வேண்டியிருக்கும்.” என்று காட்டமாக பதில் அளித்தார்.

இதனையடுத்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை “பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.அதிமுக நிர்வாகிகள் புரிந்துகொண்டு பேச வேண்டும்” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ “ எங்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். இதனை முன்னதாகவே நாங்கள் அறிவித்து விட்டோம். பாஜவினர் சொல்வதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.” என்றார்.