தமிழ்நாடு

என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன்

என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன்

webteam

கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என நான் கூறியதில் எந்த தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் ஆதரவும் தெரிவித்தனர். 

இதனிடையே, கமல்ஹாசன் பங்கேற்ற பரப்புரை கூட்டங்களில் அவர் மீது காலனி வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பதற்றமான சூழல் இருப்பதாக கூறி சூலூரில் கமல்ஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என நான் கூறியதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை; இது உருவான சர்ச்சை அல்ல; உருவாக்கப்பட்ட சர்ச்சை. பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். சரித்திரம் பதில் சொல்லும். கோட்சே குறித்து மெரினாவில் நான் பேசியுள்ளேன். அதை பெரிதுபடுத்தாதவர்கள், அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்திவிட்டனர்.

சூலூரில் நான் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்திருப்பதில் அரசியல் உள்ளது. சூலூரில் பதற்றமான சூழல் இருந்தால் ஏன் தேர்தலை தள்ளிவைக்கக்கூடாது. கைதுக்கு நான் பயப்படவில்லை. கைது செய்யப்பட்டால் பதற்றம் அதிகரிக்கும். அதனால் என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது. இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.