’எனக்கும் இந்தி தெரியாது' என பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சால் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. இதை திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது அதில் பேசிய பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், நமஸ்காரம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். அப்போது 'வணக்கம்...' என்று திமுக உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் சத்தமாக கூறினர்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய அவர்... ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகள் கலந்து நான் பேசுவேன் மன்னித்து விடுங்கள் என கூறிய அவரிடம் இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என்று நகைச்சுவையாக திமுக உறுப்பினர்கள் கூறினர். அதற்கு 'எனக்கும் இந்தி தெரியாது ' என்று உமா பதிலளித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் கைதட்டி சிரிப்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து பேசிய அவர், கவுன்சிலர்களுக்கும் ஊதியம் அவசியம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். அப்போது குறிக்கிட்ட துணை மேயர் மகேஷ்குமார், ஒன்றிய அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்ததை அடுத்து திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.