ஒசூரில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த கட்டடத் தொழிலாளர்கள் 8 பேரை தீயணைப்புத் துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.
கர்நாடக மாநில எல்லையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சந்தாபுரா, ராம்சாக்ரா, முத்தாநல்லூர், பிதுருக்குப்பே உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து தமிழக எல்லையான ஓசூர் பகுதியை நோக்கி வருகிறது.
அவ்வாறு வரும் வெள்ள நீர் தமிழக எல்லையில் உள்ள பேகேப்பள்ளி கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. தரைப்பாலத்தின் மேல் அதிக அளவு வெள்ளநீர் செல்வதால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், கிராம மக்கள் என பல தரப்பினரும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுமார் மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாகா மாறியுள்ளது. இதனால் விளை நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமத்தைந்துள்ளன.
இந்நிலையில், கலைமோகன் என்பவரது நிலத்திலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே கட்டடத்தில் தங்கி இரண்டு ஆண்கள், 3 பெண்கள், 3 குழந்தைகள் என 8 பேர் தற்காலிகமாக தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த கட்டடத்தை சுற்றி 7 அடிக்கு மேல் நீர் நிரம்பியதால் அவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த சிப்காட் காவல் துறையினர் மற்றும் சிப்காட் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி வாகனம் மற்றும் கயிறு மூலம் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போராடி அவர்களை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்துள்ளனர்