தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறுகிறது: ஹிப் ஹாப் ஆதி குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறுகிறது: ஹிப் ஹாப் ஆதி குற்றச்சாட்டு

webteam

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் திசை மாறுகிறது என ஹிப் ஹாப் ஆதி தனது முகநூல் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ’டக்கரு டக்கரு’ பாடல் மூலம் குரல் கொடுத்த சினிமா நட்சத்திரம் ஹிப்ஹாப் ஆதி, மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் திசை மாறுகிறது என ஆதி தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் வீடியோ பதிவிட்டுள்ள ஆதி, தனித் தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு, தேசியக்கொடி அவமதிப்பு என போராட்டம் திசைமாறி வருவதாகவும். தேசியக்கொடியை அவமதிக்கும் தேச விரோத செயலுக்கு தான் துணை போக மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்துக்கான நோக்கம் திசைமாறி செல்வதால் உண்மையாக போராடியவர்கள் வேதனை அடைந்துள்ளதாகவும் ஆதி கூறியுள்ளார்.

போராட்டத்தின் போது மனதை புண்படுத்தும் செயலில் சிலர் ஈடுபட்டதால் வெளியேறியதாகவும்.போராட்டத்தில் ஈடுபட்ட எனக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழர் அடையாளம் என்ற பிரச்னையில் இருந்து போராட்டம் விலகுவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுப்பேன் என்றும் இதில் வேறு விதமான கருத்துக்களை திணிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி பிரச்னையை தவறாக எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் ஆதி தெரிவித்துள்ளார்