தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Sinekadhara

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து 2018-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தேர்தலுக்கு இடைக்கால தடைவிதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, “விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னை நீக்கிய பிறகுதான் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனது நீக்கம் செல்லாது என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளேன். என்னைப்போல 27,000 உறுப்பினர்கள் வழக்கில் இணைய தயாராக உள்ளனர்”என கே.சி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன் தெரிவித்தார்.

தொடர்ந்து விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி செய்வதாகவும், மனுவாங்க சென்றவரை வெளியில் துரத்தி உள்ளனர் எனவும் இடையீட்டு மனுதாரர் பிரசாத் சிங் தரப்பு வாதம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு, எதிர்த் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால் இன்று வழக்கு தொடராதவர்கள் வாதிட முடியாது. எதிர்த் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கு முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தயங்கமாட்டேன் என்று நீதிபதி தெரிவித்தார்.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன் ஆகியோர், மூன்றாண்டுகளாக கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்றும், நீக்கத்தை எதிர்த்து சிவில் வழக்காக தொடர்ந்து, வென்று, பின்னர் இந்த வழக்கை தொடரலாம் என்றும் தெரிவித்தனர். அப்போது தேர்தலை 5 நாளில் அதிமுக நடத்தும்போது, பதில்மனுவை 2 நாளில் தாக்கல் செய்ய முடியும் என கே.சி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, 2018ல் நீக்கப்பட்ட பிறகு, அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எப்படி வழக்கு தொடரமுடியும் என  கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்காலத்தடை விதிக்க முடியாது. தள்ளுபடி செய்வதென்றால் தயார், மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள். அதிமுக, நிர்வாகிகள் பதிலளிக்கட்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சட்ட விதிமீறல் இருந்தால் தேர்தலில் எந்த முடிவெடுக்கப்பட்டாலும் அதை ரத்துசெய்யவும் தயார். மூன்று வாரம் பதிலளிக்க அவகாசம் தேவை எனக்கூறி,வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.