தமிழில் தபால்துறை தேர்வு இந்த ஆண்டிற்கு மட்டுமா அல்லது வரும் ஆண்டுகளிலும் பொருந்துமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஜூலை 14 தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே
இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து, ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அப்போது, தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து
பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். அத்துடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்படுகின்றன என்று அவர் அறிவித்தார்.
இதனிடையே தபால்துறை தேர்வு தமிழில் நடத்த வேண்டும் என திமுக சார்பில் உயநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ரவிசங்கர் பிரசாத் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்ததை மத்திய அரசு தரப்பு சுட்டிக்காட்டியது. இதையடுத்து அப்போது தமிழில் தபால்துறை தேர்வு இந்த ஆண்டிற்கு மட்டுமா அல்லது வரும் ஆண்டுகளிலும் பொருந்துமா என ஜூலை 23 ஆம் தேதி தெரிவியுங்கள் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தது.