தமிழ்நாடு

'அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: ‘தேர்தல் நடத்தலாம், ஆனால்...’- உயர்நீதிமன்றம் உத்தரவு!

'அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: ‘தேர்தல் நடத்தலாம், ஆனால்...’- உயர்நீதிமன்றம் உத்தரவு!

நிவேதா ஜெகராஜா

அதிமுக பொது செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த  மனுக்களை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அதன் முடிவில் ‘தேர்தல் நடத்தலாம்’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, “சட்டவிதிகளை மீறி பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது” என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் தங்கள் வாதத்தில் “நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர் இபிஎஸ் தரப்பினர். வெள்ளிக்கிழமை காலை பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிமன்றம் தள்ளிவைத்த நிலையில், அன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை தேவை. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பென்பதே, நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவது போன்றதாக இருந்துள்ளது.

தீர்மானங்களை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி இபிஎஸ் தரப்பு பேசவில்லை. தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறையை முடக்கும்வகையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியை விட்டு நீக்கியதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது தவறு.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு எவரும் அடைய முடியாது. தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் அங்கீகரிக்கவில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு 5 ஆண்டுகள் தலைமைக்கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைமைக்கழக நிர்வாகிகளாக இல்லாத கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எவரும் போட்டியிட முடியாது” என வாதம் முன்வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வைத்திலிங்கம் தரப்பினர், “உறுப்பினர்களிடம் வாக்குச்சீட்டு கொடுத்து தேர்தலை சந்திக்க முடியுமா? அப்படி தேர்தலை சந்திக்க தைரியம் இருக்கிறதா? பொதுச்செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாததாகி விடும்” என இபிஎஸ் தரப்பை கேட்டார்.

தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதத்தில், “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்களின் மூலமே நடத்தப்படுகிறது. 1.50 கோடி உறுப்பினர்களில் ஓ.பி.எஸ்.க்கு 1% கூட ஆதரவு இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஓ.பி.எஸ். நேரடியாக வழக்கு தொடரவில்லை; வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை பார்த்தும், ஓ.பி.எஸ். தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன.

உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்தோம். அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை” என்றனர்.

அதிமுக தரப்பில், “ஜூலை 11 பொதுக்குழுவின்  அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், கட்சி செயல்பாட்டை அனுமதிக்க வேண்டும். விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம்; அதன்படியே பொதுச்செயலாளர் தேர்வுக்கான விதி கொண்டுவரப்பட்டது. 2017-ல் ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்காக பொதுக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதுபோலவே தற்போதும் விதிகள் திருத்தப்பட்டுள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதனமானவை அல்ல” எனக்கூறப்பட்டது.

தொடர்ந்து இருதரப்பிலிருந்தும் விவாதங்கள் வைக்கப்பட்டுக்கொண்டே இருந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பை வாசித்தது. அதன்படி, “பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம், ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது” என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், “கடந்த ஜூலை 11 நடந்த பொதுக்குழு தொடர்பான வழக்கு ஏப்ரல் 11-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அது தற்போது மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு மார்ச் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும்” என்றனர்.