தமிழ்நாடு

கோலி, தமன்னாவை கைது செய்யக்கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கோலி, தமன்னாவை கைது செய்யக்கோரிய வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

webteam

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும், அதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்- லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னயை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நேரடி சூதாட்டத்திற்கு தடையுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் தற்போது அதிகரித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், ஆன்லைன் சூதாட்டங்கள் அதை விட ஆபத்தானது என்பதால் இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மேலும், ஆன் லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.