அரசியல் தலைவர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள மத போதகர் ஜார்ஜ் பொன்னையா, தன் மீதான வழக்கை ரத்து செய்ய, FIR-ன் உண்மை நகலின்றி மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மத பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மத போதகர் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியிருந்ததாக புகார் எழுந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது. கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது. மேலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜார்ஜ் பொன்னையா மதுரை மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் தனக்கு ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யபட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜார்ஜ் பொன்னையா மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் “என் மீது பதியப்பட்ட FIR-ன் உண்மையான நகல் இதுவரை கிடைக்கவில்லை. எனவே FIR உண்மை நகல் இல்லாமல், வழக்கை ரத்து செய்வதற்காக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், FIR-ன் உண்மை நகல் இல்லாமல் மனுத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.