தமிழ்நாடு

நேரடி விசாரணை மட்டும் நடைபெறும் என்ற உயர்நீதிமன்ற முடிவு - மறுபரிசீலனை செய்யப்படுமா?

நேரடி விசாரணை மட்டும் நடைபெறும் என்ற உயர்நீதிமன்ற முடிவு - மறுபரிசீலனை செய்யப்படுமா?

Veeramani

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நாளை முதல் நேரடி விசாரணை மட்டும் நடைபெறும் என்ற முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன், காரணமாக உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை மூடப்பட்டு அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிபதிகள் வீட்டிலிருந்தும், நீதிமன்றத்துக்கு வந்தும் வழக்குகளை விசாரித்தனர்.

அதன்பின்னர், வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காணொலி காட்சி மூலமும், நேரடியாகவும் என கலப்பு விசாரணை முறை அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், ஜனவரி 3ம் தேதியான நாளை முதல் வழக்குகள் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காணொலி காட்சி விசாரணை முறை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா பரவல் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் நிலையில், நேற்று முன் தினம் தமிழக அரசு பிறப்பித்துள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணையுடன், மீண்டும் காணொலி விசாரணை அனுமதிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது.