தமிழ்நாடு

டாஸ்மாக்கில் மொத்தமாக விற்பனை செய்பவர்களை ஏன் கைது செய்வதில்லை? : நீதிமன்றம் சரமாரி கேள்வி

டாஸ்மாக்கில் மொத்தமாக விற்பனை செய்பவர்களை ஏன் கைது செய்வதில்லை? : நீதிமன்றம் சரமாரி கேள்வி

Sinekadhara

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாக மது வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர், அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்வதில்லை? என மதுரைக்கிளை நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறது. 

தஞ்சை மாவட்டம் தஞ்சை, கும்பகோணம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஆய்வுசெய்து பலரை கைதுசெய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி பலர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது

அப்போது அரசு தரப்பில், "மனுதாரர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசின் மதுபானக் கடைகளில் இருந்து 500 மதுபாட்டில்கள், 300 மது பாட்டில்கள் என வாங்கி பதுக்கிவைத்து விற்பனை செய்துள்ளனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரர்களில் சிலருக்கு நிலுவையில் வேறு வழக்கு இல்லாததால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்.

ஏற்கனவே 4 மற்றும் 5 குற்ற வழக்குகள் உள்ள நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அரசின் மதுபானக் கடைகளில் இருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி, பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 200, 300, 500 என மதுபாட்டில்களை அதிக அளவில் விற்பனை செய்தது யார்? டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாக மது வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் காவல்துறையினர், அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது ஏன் வழக்குபதிவு செய்வதில்லை? மொத்தமாக விற்பனை செய்வதும் சட்டவிரோதம் தானே? ஏன் விற்பனையாளர்மீது வழக்குபதிந்து கைது செய்யவில்லை போன்ற கேள்விகளை எழுப்பி வழக்கின் அடுத்த விசாரணையின்போது இது சம்பந்தமான முழு தகவலையும் காவல்துறையினர் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் ஜாமீன் கோரியுள்ள மனுதாரர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் ஜாமீன் கோரியபோது காவல்துறை தரப்பில் அங்கு வேறு தகவல்களும் உயர்நீதிமன்றத்திற்கு வேறு தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? அவ்வாறு இருப்பின் சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.