தமிழ்நாடு

புதிய பிரச்னைக்கு அரசு வழிவகுக்கிறது - மதுரை உயர்நீதிமன்றம்

புதிய பிரச்னைக்கு அரசு வழிவகுக்கிறது - மதுரை உயர்நீதிமன்றம்

webteam

சுமூக தீர்வு காண ஆசிரியர்களை அழைத்து ஏன் பேச்சு நடத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுமூக தீர்வு காண ஆசிரியர்களை அழைத்து ஏன் பேச்சு நடத்தக் கூடாது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு செய்முறைத்தேர்வு தொடங்கும் நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அரசு மீண்டும் ஒரு புதிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அரசு விளக்கம் அளித்த நிலையில், சிறிது நேரத்திற்கு வழக்கை விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.