டிசம்பர் 2,3,4 ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் ரெல் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
முன்னதாக, வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தெற்கு வங்க கடலில் மையப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது நவம்பர் 26 ஆம் தேதி அதிகாலை கடலூர் புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இந்த நிவர் புயல் காரணமாக மூன்று நாட்களுக்குமேல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து நீர் நிலைகளில் நிரம்பி வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
ஆனால், டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. மிகக் குறைவான அளவிலேயே மழைபெய்தது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விவசாயிகளும் இந்த மழையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.