தமிழ்நாடு

கொட்டித்தீர்க்கும் கனமழை - தத்தளிக்கும் ராமேஸ்வரம்!

கொட்டித்தீர்க்கும் கனமழை - தத்தளிக்கும் ராமேஸ்வரம்!

webteam

ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது


வங்கக் கடலில் உருவான  ‘புரெவி’ புயல் இலங்கையின் திருகோணமலையில் கரையை கடந்து தமிழகம் நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. முன்னதாக புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனிடையே ‘புரெவி’புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.


எனினும், ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. படகுகளை இடைவெளிவிட்டு மீனவர்கள் கட்டிவைத்திருந்தப்போதும், பலத்த காற்றின் காரணமாக ஏராளமான படகுகள் சேதமாயின. இதனிடையே அங்கு பெய்த கனமழையால் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

இதே போல் கடல் அலை சீற்றம் காரணமாக மீனவ கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிறப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். மனோலி தீவில் சிலர் சிக்கிக்கொண்டதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ரோந்து கப்பல் மூலம் அங்கு சென்ற கடலோர காவல்படையினர் அவர்களை மீட்டு முகாமிற்கு அனுப்பிவைத்தனர். மேலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சேது ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திற்கு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் வலுவிழந்தப்போதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பொழிந்தது. இதனால் அங்கு பல இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.