தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

webteam

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வருடம் பருவமழையும் சரிவர பெய்யவில்லை. கடுமையான வெயிலும் வாட்டி வதைப்பதால் தமிழக மக்கள்  தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கின்றன. மழை பெய்தால்தான் தண்ணீர் என்பதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். அவ்வப்போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், போதுமான மழை பெய்யவில்லை. 

இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் ராயலசீமா முதல் தமிழகத்தின் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

மேலும், திருவள்ளூர் முதல் உள் தமிழக மாவட்டங்கள் வழியாக தேனி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.