சென்னையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை டி.பி சத்திரம் போலீசார் நேற்று அந்த பகுதியில் உள்ள பள்ளி அரசன் தெரு, நியூ ஆவடி சாலை சந்திப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருளை ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 36 ஆயிரத்து 800 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Read Also -> விடிய விடிய மழை... ஜில்லென்று மாறிய சென்னை
அதேபோல டிபி சத்திரம், கே.எச் ரோட்டில் அயனாவரத்தைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா என்பவர் போலீசாரின் சோதனையில் சிக்கினார். அவரிடமிருந்து ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா சிக்கியது. மேலும் திருவொற்றியூர் போலீசார் தண்டையார்பேட்டை, துர்காதேவி நகர் தெருவில் ரகசியமாக கண்காணித்த போது அங்கு ஒரு வீட்டில் குட்கா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், தஸ்புதின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 18 கிலோ மாவா மற்றும் அதனை அரைக்கப் பயன்படுத்தும் 6 மிக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அயனாவரம் போலீசார் ஜீவா பார்க் அருகில் குட்கா விற்பனை செய்த வெங்கடசுப்பிரமணியம், சுரேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 பாக்கெட் குட்கா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.