குட்கா மோசடி வழக்கில் சில கேள்விகளுக்கு பதிலளிக்கக்கோரி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருக்கும், தற்போதைய ஐஏஎஸ் அதிகாரிக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் வருமான வரித்துறை முதன்மை இயக்குநராக இருந்த பி.ஆர்.பாலகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகனராவைச் சந்தித்து, குட்கா விவகாரம் தொடர்பான அறிக்கையை அளித்தார். இந்த அறிக்கை, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ராமமோகனராவ் அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றின் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குட்கா மோசடி வழக்கில் சில கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு, அப்போதைய ஆலோசகர் ஷீலா பாலகிருஷணன் மற்றும் ஜெயலலிதாவின் செயலராக இருந்த வெங்கடரமணன் ஆகியோருக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநர் அலுவலகம் கடிதம் அனுப்பியிருப்பதாக ஆங்கில நாளிதழான ‘தி இந்து’வில் செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும் மாநில உள்துறையின் முதன்மைச் செயலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த அபூர்வா வர்மாவிடமும் கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.