தமிழ்நாடு

விரைவில் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி

விரைவில் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி

Rasus

ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி, அவசரகால அழைப்பு பொத்தான் ஆகியவை விரைவில் அறிமுகமாக உள்ளன.

சென்னையில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் சாமானிய மக்கள் பெரிதும் நம்பியிருப்பது ஆட்டோவைதான். நள்ளிரவு நேரங்கள், பேருந்து வசதி இல்லாத இடங்கள், அவசர தேவை என எல்லாவற்றிற்கும் சென்னையில் ஆட்டோக்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. ஆனால் இதற்கெல்லாம் மேலாக சில நேரங்களில் ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது.

இந்நிலையில் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவி, அவசரகால அழைப்பு பொத்தான் ஆகியவை விரைவில் அறிமுகமாக உள்ளன. சென்னையில் 43 ஆயிரம் ஆட்டோக்களில் இந்த வசதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பேட்டரியுடன் கூடிய இந்த ஜிபிஎஸ் கருவி மூலம், ஆட்டோ ஓட்டுநரை காவல் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்பு கொள்ள முடியும். மீட்டர் போடாமல் ஆட்டோ ஓட்டுவதை ஜிபிஎஸ் கருவி மூலம் அறிந்து, ஓட்டுநரை அழைத்து மீட்டர் போடுவதை காவலர் உறுதிப்படுத்த முடியும். ஆட்டோ மீட்டரை யாராவது பழுதாக்க முயன்றால், அதுவும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை அனுப்ப வகை செய்யப்பட்டுள்ளது.

ஒருமுறை மீட்டரை ஆஃப் செய்தால் 100 முதல் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தவறு செய்தால் ஆட்டோ உரிமத்தை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளை பொருத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நிறுவனம், அண்ணாநகர் போக்குவரத்து அலுவலகத்தில் 20 ஆட்டோக்களில் இதை செயல்படுத்திக் காட்டியுள்ளது. எனினும், ஆட்டோ மீட்டர் விலை 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை என்பது நிதிச்சுமை என்று கூறும் ஆட்டோ ஓட்டுநர்கள், மீட்டரை வாங்க அரசு மானியம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.