சென்னை அண்ணா நகர் பேருந்து பணிமனையிலிருந்து, மாநகரப் பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்தை கடத்தியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பேருந்தில் பொருட்களை கடத்திச் செல்வது குறித்து செய்திகள் வாயிலாக அறிந்திருப்போம். ஆனால் அரசுப் பேருந்தையே கடத்திச் சென்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஓட்டுநர் பணிமனையின் உள்ளே சென்று கையெழுத்திட்ட பின், வெளியே வரும் சிறிது நேரத்திற்குள் பேருந்து கடத்தப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பணிமனையில் வழக்கம்போல், அதிகாலையில் பேருந்தை எடுப்பதற்காக போக்குவரத்து ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது, பணிமனையிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு 27பி என்ற வழித்தட எண் கொண்ட அரசுப் பேருந்தை சோதனை செய்த பின், பணிமனையின் முன்பாக ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். பின்னர், கையெழுத்திட்டு வருவதற்காக பணிமனைக்கு உள்ளே சென்று விட்டு, 4 மணிக்கு திரும்பிய போது, நிறுத்திய இடத்தில் பேருந்து இல்லாமல் போனதைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், அரசுப் பேருந்து காணாமல் போனது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், திருமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவியைக் கொண்டு, பேருந்து இருக்குமிடத்தை காவல் துறையினர் கண்டறிய முயற்சித்தனர். அப்போது, பேருந்தானது பாடி மேம்பாலத்தின் கீழ் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேம்பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த பேருந்தை காவல்துறையினர் மீட்டனர். பணிமனையில் இருந்த பேருந்தை வெகு லாவகமாக கடத்திச் சென்றவர்களை கண்டுபிடிப்பதற்காக, பணிமனையைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.