bus accident file image
தமிழ்நாடு

வாணியம்பாடி: அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. 4 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 ஆண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

யுவபுருஷ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில்,  எதிர்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இரு ஓட்டுநர்களும் பலி!

இந்த விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநரான உளுந்தூர் பேட்டையை சேர்ந்த ஏழுமலை, தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநர் நதிம், வாணியம்பாடியை சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார்  மற்றும் சென்னையை சேர்ந்த  கிருத்திகா என்ற பெண் உட்பட 5  பேர் உயிரிழந்தனர்.

40க்கும் மேற்பட்டோர் காயம்!

மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, விபத்தில் சிக்கிய பேருந்துகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டுள்ளது. 

மேலும்  விபத்து நடந்த  இடத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் நேரில் ஆய்வு மேற்கொண்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். குறிப்பாக, பேருந்தில் பயணித்த கிருத்திகா என்பவர், தனது இரு குழந்தைகளுடன் பெங்களூரில் இருந்த சென்னை சென்ற போது நடந்த இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது இரு குழந்தைகளும் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.