ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.
மும்பையில் இருந்து காலையில் புறப்பட்ட ஆளுநர், 10.45 மணியளவில் சென்னை வந்தடைந்தார். கடந்த வாரத்தில் சென்னை வந்த அவர், ஓரிரு நாளில் மும்பை திரும்பினார். மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.
இதுதவிர ஆளுநர் வித்யாசாகரிடம் விசாரணை நடத்த வேண்டும், அவர் ஜெயலலிதா கை விரலை அசைத்துக் காட்டினார் என்று கூறியது எவ்வாறு என்றும் அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள சூழலில் ஆளுநர் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.