தமிழ்நாடு

காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து மரியாதை

காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து மரியாதை

JustinDurai

காந்தியடிகளின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மலர் மாலையுடன் கதர் நூல் மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதற்கு முன்பே காந்தி சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்காக 5 நிமிடங்கள் காத்திருந்தார். பின்னர் அவர் வந்த உடன் இருவரும் சேர்ந்து காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிலைக்கு அருகே சென்னை சர்வோதய சங்கத்தினர் பள்ளி மாணவிகளுடன் இணைந்து பாடிய தேச பக்தியூட்டும் பாடல்களை ஆளுநரும், முதலமைச்சரும் சிறிது நேரம் கேட்டு ரசித்தனர். அப்போது, அச்சங்கத்தின் சார்பில் இருவருக்கும் கதர் நூல் மாலை பரிசளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, கடற்கரை உள்வட்ட சாலை வழியே போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

இதையும் படிக்க: `கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி' என தலைப்பிட்டு முரசொலியில் கட்டுரை