தமிழ்நாடு

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம்: இடம் தேர்வு தொடர்பான வழக்கு முடித்து வைப்பு

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம்: இடம் தேர்வு தொடர்பான வழக்கு முடித்து வைப்பு

Veeramani

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

மதுரை, பேரையூரைச் சேர்ந்த செல்வ பிரீத்தா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "குற்றப் பழங்குடி சட்டத்திற்கு எதிராக 1920 பெருங்காமநல்லூரில் போர் நடைபெற்றது. அதில் 16 பேர் வீரமரணம் அடைந்தனர். 2020 ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் இந்த போர் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு ரத்தம் சிந்திய இடத்திலேயே மணிமண்டபம் கட்டித் தரக்கோரி பலமுறை மனு அளித்த நிலையில் 2019 மார்ச் 8ஆம் தேதி மணிமண்டபம் கட்டித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி 2020 செப்டம்பர் 19-ஆம் தேதி பெருங்காமநல்லூரில் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், பெருங்காமநல்லூரில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடமானது மயானம் ஆகும். அதில் பயன்பாடு இல்லாத 1.98 ஹெக்டேர் இடத்தில் நினைவு மண்டபம் அமைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நினைவு மண்டபம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதோடு இந்த மயானத்தை பெருங்காமநல்லூர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் நினைவு மண்டபம் அமைக்க சரியானதாக இல்லை. ஆகவே பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உரிய இடத்தை தேர்வு செய்து அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக நீதிமன்றம் தடை உத்தரவையும் பிறப்பிக்க இயலாது இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அனுப்பி மனுதாரர் நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்