ஈரோடு அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்து பெரியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக தனலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தரையில் பெயிண்ட் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை பலர் எதிர்த்து வரும் நிலையில் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, பள்ளி மாணவ, மாணவிகள் தாங்களாகவே ஆர்வத்துடன் சுவர்களில் ஓவியம், வண்ணங்கள் பூசுவது போன்று செய்து வருவது வழக்கம் என்றும் கோலம் போடுவதற்காக பெயிண்ட் அடிக்கும்போது யாரோ தவறுதலாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.