தமிழ்நாடு

கொரோனா எதிரொலி: கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிக்க ஜகி வாசுதேவ் வலியுறுத்தல்

கொரோனா எதிரொலி: கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிக்க ஜகி வாசுதேவ் வலியுறுத்தல்

webteam

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வேலை இழந்து தவிக்கும் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்று ஈஷா நிறுவனர் ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலால், உலகம் முழுவதும் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. விமான போக்குவரத்து, பயணம் மற்றும் சுற்றுலா சார்ந்த பெரும் தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கும் ஒரு முக்கிய பிரிவினரான தினக் கூலித் தொழிலாளர்கள் மீது உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜகி வாசுதேவ் ட்விட்டர் பதிவு மூலம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் மிக மோசமான ஒன்றாகும். உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும், இறப்புகளுக்கும் வழிவகுக்கும். அவர்களுக்கு தினசரி உணவையேனும் வழங்குவது இந்த சமூகத்தின் பொறுப்பு. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவுவதை முறியடிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்குரு மும்பையில் நடத்தவிருந்த 'இன்னர் இன்ஜினியரிங்' நிகழ்ச்சியும், ஏப்ரலில் அவர் மேற்கொள்ளவிருந்த தென் ஆப்ரிக்க பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.