மதுரையில் கொரோனாவால் இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து நாடகமாடி குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில், இதயம் அறக்கட்டளையின் மற்றொரு அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தில் நடந்த இரக்கமற்ற சம்பவத்தில் இதுவரை காப்பக ஒருங்கிணைப்பாளர், குழந்தையை வாங்கிய தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் காப்பகத்துக்காக மதுரை மாநகராட்சியால் மாட்டுத்தாவணியில் தரப்பட்ட உதவி மையத்தில் வருவாய் மற்றும் காவல்துறையினர் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். அங்கு இருந்த அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிய அதிகாரிகள், இதயம் அறக்கட்டளையின் விளம்பரப் பதாகைகளை அகற்றிவிட்டு உதவி மையத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களை வருகிற 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. காப்பகங்கள் பதிவு தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் செயல்படக்கூடிய குழந்தை நல காப்பகங்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 படி வீடு அல்லது தங்குமிடம் இல்லாமல் இருக்கும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு என தமிழக அரசின் சமூகநலத் துறை சார்பாக 156 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிறுவர்கள் 523 பேரும் சிறுமிகள் 1,679 பேர் தங்கி உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் 17 இல்லங்களில் 230 சிறார்கள் இருக்கின்றனர்.
இவை மட்டும் இன்றி அரசு நிதி உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 850 குழந்தைகள் காப்பகங்களை நடத்தி வருகின்றன. இதில் 11 ஆயிரத்து 658 சிறார்கள் உள்ளனர். அரசு உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உள்ள ஒரு குழந்தைக்கு மாதம் 2 ஆயிரத்து 160 ரூபாய் பராமரிப்பு மானியமாக வழங்கப்படுகிறது. நடப்பு நதியாண்டில் இந்த திட்டத்திற்கு 115.43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.