தமிழ்நாடு

குலதெய்வ வழிபாடு, நடராஜன் நினைவுநாள் : தஞ்சை வருகிறார் சசிகலா

குலதெய்வ வழிபாடு, நடராஜன் நினைவுநாள் : தஞ்சை வருகிறார் சசிகலா

Veeramani

குலதெய்வக்கோவிலில் வழிபாடு நடத்தவும், ம.நடராஜன் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துவதற்காகவும் திடீர் பயணமாக தஞ்சாவூர் வருகிறார் சசிகலா.

சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையை முடித்து, பிப்ரவரி 9 ஆம் தேதி சென்னை வந்தார் சசிகலா. சென்னையில் தி.நகர் இல்லத்தில் தங்கியுள்ள அவர், அதன்பிறகு வெளி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. சென்னைக்கு வந்தபோதும், ஜெயலலிதா நினைவுநாளின்போதும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என பேசிய சசிகலா திடீரென அரசிலை விட்டு ஒதுங்குவதாக முடிவெடுத்தது, தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியது.

மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகே வெளி இடங்களுக்கு செல்லலாம் என்ற முடிவில் சசிகலா இருந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் இதுவரையிலும் நினைவிடம் திறக்கப்படவில்லை. இந்த சூழலில்தான் தஞ்சை அருகே விளாரில் உள்ள குல தெய்வக்கோவிலில் சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளார் சசிகலா. சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் அண்ணன் பழனிவேலில் பேரக்குழந்தைகளின் காதணிவிழா நாளை நடைபெறுகிறது, இந்த விழாவில் கலந்துகொள்ளும் சசிகலா, தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜனின் பங்களாவில் மூன்று நாட்கள் தங்குவதாக சொல்லப்படுகிறது.

வரும் மார்ச் 20 ஆம் தேதி ம.நடராஜனின் நினைவுநாள் வருகிறது, அன்று விளாரில் உள்ள அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருக்கும் சசிகலா, முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் சந்திக்கவுள்ளார் என சசிகலாவின் நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர். இது தேர்தல் நேரமாக உள்ளதால் சசிகலாவின் தஞ்சைப்பயணம் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. டெல்டா உள்ளிட்ட தென்மாவட்டங்களின் அமமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர், இந்த சூழலில் சசிகலாவின் வருகையால் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்று அதிமுக தரப்பிலிருந்து கவனமாக உற்றுநோக்கப்படுகிறது.