விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிடடு இந்த வார வெள்ளிக்கிழமை வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. இதில், செஞ்சியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் (நாளை) சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் தங்களது ஆடுகளை கொண்டு வந்தனர். அதேபோல் ஆடுகளை வாங்குவதற்காக சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் வேலூர் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளோடு நேற்று முன்தினமே வந்து விட்டனர்.
இதையடுத்து ஆட்டுச் சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர். இதில், ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.9 முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச் சந்தையில் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.