விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்றது செஞ்சி ஆட்டுச் சந்தைக்கு சேலம், தர்மபுரி, வேலூர்,ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை பெங்களுர் போன்ற மாநிலங்களில் இருந்தும் இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வர்.
இந்நிலையில், வரும் 29-06-23 தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனையாகி வருகிறது. இன்று செஞ்சி வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களுர் , சேலம் ,திருவண்ணாமலை , வேலூர் , தருமபுரி , சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்தனர். அதற்கேற்றார் போல் கிராமப் பகுதிகளிருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து பக்ரீத் பண்டிகை குர்பானி கொடுப்பதற்காக செம்மரி ஆடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கருப்பு ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வார சந்தையில் மட்டும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானதாகவும், விற்பனைத் தொகை 6 கோடிக்கு மேல் இருக்கலாம் என்றும் உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் விலையும் சற்று குறைவாகவே உள்ளதாக வெளியூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.