செய்தியாளர்: தங்கராஜூ
தாரமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”அதிமுக, திமுக குறித்து நான் சில உண்மைகளை கூறினால் மக்கள் அவர்களை கல்லால் அடிப்பார்கள்” என்று பேசினார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாராமங்கலம் நகராட்சியில், நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், ”அதிமுக, திமுக பற்றி சில உண்மைகளை சொன்னால் மக்கள் அவர்களை கல்லால் அடிப்பார்கள். அவ்வளவு துரோகம் மக்களுக்கு செய்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் என்ன செய்தார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இது தேர்தல் நேரம் அதனால், அவர்களைப் பற்றி இப்போது பேச போவதில்லை. நான் சில உண்மைகளை சொன்னால், இரண்டு கட்சியையும் என்ன செய்வீர்கள் என்று தெரியாது. அவ்வளவு கோவம் உள்ளது.
இட ஒதுக்கீடு வழங்காமல் இரண்டு கட்சிகளும் இந்த சமுதாயத்திற்கு அவ்வளவு துரோகம் செய்து கொண்டுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு வருகிறேன். கிராமம் கிராமமாக வந்து உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். ஆனால், இன்று நான் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். எனது வலியை, அய்யாவின் வலியை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்” என்று பேசி முடித்தார்.