கஜா புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெறுகிறது.
கஜா புயல் நாகை - வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன.‘கஜா’ புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது.’கஜா’ புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள மாவட்டங்களில், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, தங்களது வீடு, கடைகள், கால்நடைகள், தோட்டம், விவசாய பயிர்கள் என அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து கையறு நிலையில் உள்ளனர்.
இதனிடையே கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு, பாதிப்புக்கான நிவாரணத்தொகையையும் அறிவித்துள்ளார். அதன்படி ''கஜா புயலால் உயிரிழந்த 45 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெறுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதனைதொடர்ந்து கஜா புயலின் சேதம் குறித்து பிரதமரிடம் ஆய்வறிக்கைகை கொடுத்து, மத்திய அரசிடம் நிவாரண நிதி கோர முதலமைச்சர் பழனிசாமி வரும் 22ஆம் தேதி டெல்லி பயணம் செய்யவுள்ளார்.