ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் பைப்லைன் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூரூக்கு கெயில் பைப்லைன் கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் வயல்களில் குழாய் பதிப்பதால் பாதிப்புகள் ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கெயில் எரிவாயு பைப்லைன் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. அப்போது விவசாயிகளின் எதிர்ப்பால் தற்காலிகமாக பைப்லைன் அமைக்க அந்நிறுவனம் பின்வாங்கிய நிலையில் இன்று, மீண்டும் கெயில் நிறுவன ஊழியர்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், சுற்றுபகுதி விவசாயிகள், கெயில் நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு பைப்லைன் அமைக்க வெட்டப்பட்ட குழிகளில் இறக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் நேரில் வந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், கெயில் பைப்லைன் நிறுவனத்தினரை அனுப்பி வைத்த பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.