தமிழ்நாடு

சென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு !

சென்னை ஒஎம்ஆர் பகுதியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு !

Rasus

சென்னை ஒஎம்ஆர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. சென்னையில் மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு தெருத்தெருவாக தண்ணீருக்கு அலைகின்றனர். குளிப்பதற்கு, பாத்திரங்களை கழுவுவதற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. என்ன செய்வெதென்பதே மக்களுக்கு புரியவில்லை. இதனிடையே தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்ததால் மக்கள் மேலும் பீதியடைந்தனர். ஆனால் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி கொடுக்கப்பட்டதால், வேலைநிறுத்தத்தை அவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஒஎம்ஆர் பகுதியில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். ஒஎம்ஆர் குடியிருப்பு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், சென்னை ஒஎம்ஆர் பகுதியில் அபார்மென்ட் குடியிருப்பு மற்றும் காலனி உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட 4,00,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே தினசரி தண்ணீர் தேவைக்காக தனியார் தண்ணீர் லாரிகளை நம்ப வேண்டியிருக்கிறது.

ஆனால் தனியார் தண்ணீர் லாரிகள் எங்கள் சாலைகளில் வருவதற்கும் சில நேரங்களில் போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகளால் இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் எங்கள் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.