தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகக்கூறி ஊரடங்கு நேரத்தில் பணிபுரியும் போலீசாருக்கு, நபர் ஒருவர் சாக்லேட் வழங்கிவிட்டுச் சென்றார்.
கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளை அமைத்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக குன்றத்தூர் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அதில் திருமண நிகழ்ச்சி மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.
அதேபோல திருமணத்திற்கு சென்றுவிட்டு பத்திரிகை இல்லாமல் வருபவர்களிடம், திருமணத்தில் கலந்துகொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை செல்போனில் காட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தான் மருத்துவமனையில் இருந்து வருவதாகவும் தனது மனைவிக்கு குழந்தை பிறந்து உள்ளது என்றும் கூறினார்.
குழந்தையை பார்த்துவிட்டு வருவதால், அந்த சந்தோசத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றுக்கூறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சாக்லேட் வழங்கி விட்டு சென்றார். மேலும் உரிய அனுமதியின்றியும் தேவையில்லாமலும் வெளியே சென்ற வாகனங்களை மடக்கி அபராதமும் வசூலிக்கப்பட்டது.