தமிழ்நாடு

’வீட்டை விற்றதோடு நண்பரின் ஏடிஎம்-ல் 40,000ஐயும் இழந்தார்’ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை

’வீட்டை விற்றதோடு நண்பரின் ஏடிஎம்-ல் 40,000ஐயும் இழந்தார்’ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை

webteam

அரூர் அருகே ஆன்லைன் கேம் விளையாடி பணத்தை இழந்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் கிரானைட் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான முத்தானூரில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி அதற்கு அடிமையான இவர், பணத்தையும் இழந்துள்ளார். இதனால் பிரபுக்கு கடன் சுமை அதிகமானதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து நேற்று வழக்கும் போல பணிக்கு சென்ற அவர், மீண்டும் கேம் விளையாடியுள்ளார். இதில், தன்னிடம் இருந்த ரூ.5000 பணத்தை இழந்ததோடு நண்பரிடம் ஏடிஎம் கார்டை பெற்று மேலும் ரூ.40,000 பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாலை வீட்டிற்குச் சென்ற பிரபு மன உளைச்சலுக்கு ஆளாகிய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் புகார் அளிக்காததால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. அரூர் அருகே ஆன்லைன் கேம் விளையாடி பணம் இழந்த விரக்தியில், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கேம் விளையாடும் சில நபர்கள் அதற்கு அடிமையாகி பண இழப்பை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.