புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதிகள் இந்து முறைப்படி பெருமாள் கோயிலில் தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரெஞ்சு விடுதலைக்குப் பின்பும் புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாச்சாரம் மாறாத வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காலங்களில் பிரான்ஸ் நாட்டினர் புதுச்சேரிக்கு சுற்றுலா வருகின்றனர். அந்த வகையில் தமிழரின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு, உடை உள்ளிட்ட கலாச்சாரங்களை அவர்கள் வெகுவாக கவரந்துள்ளது. இதனால் பல பிரான்ஸ் நாட்டினர் தமிழரின் கலாச்சாரத்தை பின்பற்றியும் வருகின்றனர். குறிப்பாக தமிழர்களின் அனைத்து பண்டிகைகளிலும் பிரான்ஸ் நாட்டினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் காண பிரான்ஸ் நாட்டினர் புதுச்சேரி வந்தனர். இதில் டேவிட் மற்றும் கரோலின் என இரு காதலர்கள் தமிழர் கலாச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி இன்று காலை புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பெருமாள் கோயிலில் இந்து முறைப்படி மணப்பந்தல் அமைத்து, ஐதீகம் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டு உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அர்ச்சதைத் தூவி மணமக்களை வாழ்த்தினர். இதில் பிரான்ஸ் நாட்டினர் மற்றும் புதுச்சேரி மக்கள் பலர் கலந்து கொண்டனர். மணமக்களை பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் வாழ்த்தினர்.