சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து கொண்டே இருக்கும் நிலையில், மாநகராட்சி கண்காணிப்பில் உள்ள 1 லட்சம் வீடுகளுக்கு உதவிகள் செய்ய 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 90 தெருக்கள் தடை செய்யப்பட்ட தெருக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட ஒருலட்சம் வீடுகள் உள்ளன. கட்டுப்பாட்டை மீறி வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் 70க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியில் வருவதை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி, 4 ஆயிரம் தன்னார்வலர்களை நியமித்துள்ளது. வார்டு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள், கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று பால், காய்கறிகள், மருந்துகள், மளிகைப் பொருட்களை வாங்கித்தருவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை அந்தந்த பகுதி உதவி பொறியாளர் கண்காணித்து வருகின்றனர்.
பொது மக்களின் தேவைகளை நிறைவேற்ற தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆயினும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை.