கடந்த வாரம் ஆவின் முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த ஜனவரி 5-ம் தேதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டிருந்தார். 20 நாட்களுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தநிலையில், இறுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் கேட்டு, கடந்த மாதம் 17?ஆம் தேதியே அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியிருந்தார். ஆனால் அப்போது அது தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்ததாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடிக்க 8 தனிப்படைகள் காவல்துறை தரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. இறுதியில் கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு அளித்திருந்தார். அது இன்று விசாரணையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், அவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது