Forest dept pt desk
தமிழ்நாடு

வாகன ஓட்டிகளை பதறியடித்து சிதற வைத்த குரங்கு.. பீதியில் ஆழ்ந்த மதுராந்தக மக்கள்.. என்ன நடந்தது?

மதுராந்தகம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த குரங்கை வனத் துறையினர் பிடித்து சிகிச்சைக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்துள்ளனர்.

PT WEB

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்திச் சென்று தாக்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை குரங்கு துரத்திய போது விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுவரை 15-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாகவும் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த ஆண் குரங்குடன் ஒரு பெண் குரங்கு தனது குட்டியுடன் வந்ததாகவும், அதில் பெண் குரங்கு காரில் அடிப்பட்டும் குட்டி குரங்கு இருசக்கர வாகனத்தில் அடிபட்டும் இறந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த சம்பவத்திலிருந்து இந்த குரங்கு இது போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பொது மக்களை அச்சுறுத்தும் குரங்கை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை வைத்ததிருந்த நிலையில், இன்று கிண்டி உயிரின மீட்புக் குழு வனத்துறையினர் நான்கு பேர் கொண்ட குழு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த செங்குரங்கை பிடித்து சிகிச்சைக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்துள்ளனர்.