ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதி டீக்கடையில் குழந்தைகள் வாங்கிய குளிர்பானத்தில் பூச்சி, குப்பைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்டு அத்தனூர், வெள்ளப்பிள்ளையார் கோவில், நாச்சிப்பட்டி, மல்லூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதுபோன்ற பல்வேறு கிராமப் பகுதிகளை குறிவைத்து குறைந்த விலைக்கு காங்கேயம் பகுதியை சேர்ந்த (TILO)தனியார் குளிர்பான நிறுவனம் குளிர்பானத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அத்தனூர் பகுதியில் உள்ள டீக்கடையில் குழந்தைகள் குளிர்பானம் வாங்க சென்றுள்ளனர். குழந்தைகள் வாங்கிச் சென்று வீட்டில் வந்து குளிர்பானத்தை அருந்த முயன்றபோது பெற்றோர்கள் குளிர்பானத்தில் மிதந்த பூச்சி மற்றும் குப்பைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சம்பந்தப்பட்ட கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் 50-க்கும் மேற்பட்ட குளிர்பானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் குளிர்பானத்தில் பூச்சி, குப்பை இருந்தது சம்பந்தமாக குளிர்பானங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் உறுதி செய்யப்பட்டால் தனியார் குளிர்பான நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.