காட்டாற்று வெள்ளத்தால் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்த்தி செல்லமுடியாத நிலையில், காடாட்ற்று வெள்ளத்தில் சடலத்தை சுமந்து 3 கிமி தூரம் நடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அருகியம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்துமாரி (55). விவசாயி ஆன இவர் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 7 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சித்துமாரியின் உறவினர்கள் தமிழக அரசு இலவச அமரர் ஊர்தியின் மூலம் சொந்து ஊருக்கு உடலை கொண்டு வந்தனர். ஆனால் கடம்பூர் அடுத்த குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அமரர் ஊர்தி மேலும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்குவந்த கிராம மக்கள் உயிரிழந்த சித்துமாரியின் சடலத்தை சுமந்தபடி காட்டாற்றை கடந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக 3 கிமீ தூரம் சடலத்தை சுமந்து சென்று குரும்பூரில் நல்லடக்கம் செய்தனர். உயர் மட்ட பாலம் இல்லாத நிலையில் காட்டாற்றில் சடலத்தை எடுத்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது, இது குறித்து மாக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணனிடம் கேட்டபோது ரூ.8 கோடியில் உயர்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டு கட்டுமான விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.