தமிழ்நாடு

3-வது முறையாக வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; 20 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

3-வது முறையாக வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு; 20 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிவேதா ஜெகராஜா
அரியலூர், பெரம்பலூர், சேலம், கடலூர் மாவட்டங்களில் பொழிந்த கனமழை காரணமாக மூன்றாவது முறையாக மீண்டும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரத்திலுள்ள 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பல வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும், அணைக்கட்டு அருகே ஆபத்தான முறையில் பொதுமக்கள் குவிந்து வருவது வேதனை அளிப்பதாக காவல்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை நீர்த்தேக்கத்திற்க்கு கடந்த இரண்டு நாட்களாக சேலம், பெரம்பலூர், அரியலூர் ,கடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வினாடிக்கு 12,347 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய நீர்வரத்தை விட இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்வதால், இந்த தண்ணீர் வரத்து மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நீர்வரத்துக்கு வரும் வெள்ளநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அதன்படி அங்கு வினாடிக்கு 12,347 கனஅடியை அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் இரு கரையோரம் உள்ள 20 கிராம  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கல்லாறு, ஸ்வேதா நதி, ஆத்தூரில் இருந்து வரும் வசிஷ்ட நதி, அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் சின்னாறு மற்றும் ஆனைவாரி ஓடை அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து நதியும் வெள்ளாற்றில் கடைசியாக கலப்பதால் வரவர இன்னும் அதிகரிக்குமென தெரிகிறது.
இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாயத்தை அறியாமல் ஆற்றை யாரும் கடக்கவோ, ஆற்றுக்கு அருகில் செல்லவும் கூடாது என காவல் துறை தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்பட்டு கரையோர மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.