தமிழ்நாடு

அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

webteam
அடையாறு ஆற்றைச் சுற்றியுள்ள 127 ஏரிகளும் நிரம்பி விட்டதால் அனைத்து தண்ணீரும் அடையாற்றில் சேர்கின்றது. இதனால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் அடையாறு வடிநில பகுதியில் விடிய விடிய கனமழை மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே இவ்வடிநில பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் தற்பொழுது பெய்யும் மழை நீர் அனைத்தும் உபரி நீராகவே ஏரியிலிருந்து வெளியேறி அடையாற்றின் கிளை ஆறுகளான ஒரத்தூர் ஓடை, சோமங்கலம் ஓடை, மணிமங்கலம் ஓடை, ஆதனூர் ஓடை ஆகிய ஓடைகளின் மூலம் அடையாற்றில் கலந்து வருகிறது.
தற்பொழுது அடையாறு தர்காஸ் சாலை பாலத்தின் கீழுள்ள நீர்ப்பகுதியில் 8,000 கன அடி நீர் செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு கரையோரம் அமைந்துள்ள வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதியில் உள்ள அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், அமுதம் நகர் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான குடியிருப்புகளில் உள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
அடையாற்றில் ஏற்படும் வெள்ளபெருக்கால், வரதராஜபும், முடிச்சூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெள்ள நீர் சூழ்கிறது. வெள்ள நீர் விரைவாக வெளியேற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வரதராஜபுரம் புவனேஸ்வரி நகரில் 50,000 மணல் மூட்டைகளைக் கொண்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.